டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? கேள்வி கேட்பது யார் தெரியுமா?
23 ஆண்டுகளாகப் பணியாற்றியும், ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
TASMAC
திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக்கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள்போல நடத்தும் தமிழ்நாடு அரசின் வன்செயல் கொடுங்கோன்மையாகும்.
TASMAC Employees
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகாலக் கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27,000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது.
Seeman
கடந்த 23 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிவரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியத்தின் கீழ் மிகக் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இதர விற்பனைப் பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாகப் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும்.
DMK
மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மதுக்கூடங்களை நடத்தும் ஆளுங்கட்சியினர் விற்பனை நடவடிக்கைகளில் தலையிட்டு ஊழியர்களை மிரட்டி, தாக்கும் போக்கினையும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும். கடந்த 2021 சட்டமன்றப் பொதுதேர்தலின்போது 10 ஆண்டுகள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 153 இன் படி டாஸ்மாக் ஊழியர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது ஏன்? இதுதான் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முறையா?
MK Stalin
ஆகவே, தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனைக்கூட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு, ஓய்வூதியம், சுழற்சிமுறையில் பணி மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும், இனியும் காலந்தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.