- Home
- Tamil Nadu News
- பதவி பறிப்பு இல்ல... மெகா ப்ரோமோஷன்: எல்.முருகன் ராஜினாமாவுக்கு பின்னால் பா.ஜ.க.வின் 2029 தேர்தல் ஸ்கெட்ச்?
பதவி பறிப்பு இல்ல... மெகா ப்ரோமோஷன்: எல்.முருகன் ராஜினாமாவுக்கு பின்னால் பா.ஜ.க.வின் 2029 தேர்தல் ஸ்கெட்ச்?
மத்திய இணையமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் இருந்து டாக்டர் எல். முருகன் விலகிய விவகாரத்தில், இது பதவிப் பறிப்பு அல்ல; மாறாக 2029 மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் திட்டமிட்ட அரசியல் வியூகம் என்பது உறுதியாகியுள்ளது.

எல்.முருகன் விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ.க
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தனது அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) பதவியையும் ராஜினாமா செய்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துப் பதவியைப் பறித்துவிட்டதா அல்லது 2029 மக்களவைத் தேர்தலுக்காகத் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளாரா என எழுந்த விவாதங்களுக்கு பாஜக தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பின்னணியில் 2029 நாடாளுமன்றத் தேர்தல் மெகா வியூகம்!
2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கட்சியைப் பலப்படுத்த பாஜக விரிவான வியூகங்களை அமைத்துள்ளது. கேரளாவில் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுக்கும் மாற்றாக மூன்றாவது சக்தியாக வளர்ந்து வரும் பாஜக, அங்கு கூட்டணி அமையாததால் தனித்து நின்று 5 இடங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதேவேளையில், தமிழகத்தில் தவெக வருகைக்குப் பின் திமுக தனித்து விடப்பட்டுள்ள சூழலில், தவெக, திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இங்கு குறைந்தது 15 மக்களவைத் தொகுதிகளை வெல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கி வெளியேறிவிட்டதால், கட்சியை வழிநடத்தவும் கூட்டணிகளை ஒருங்கிணைக்கவும் வலுவான 'கூட்டுத் தலைமை' தேவை என டெல்லி மேலிடம் கருதியது.
”பதவியை விடக் கடமை பெரியது; அதிகாரத்தை விடச் சேவை உயர்ந்தது”
இதன் காரணமாகவே எல். முருகன் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கான முடிவு செப்டம்பரிலேயே எடுக்கப்பட்டாலும், பிரதமர் மோடி சென்னை மெட்ரோ திட்டங்களைத் தொடங்கி வைக்க வரவிருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுவதால் இதில் தவறுக்கு இடமில்லை.
மேலும், எல். முருகனின் ராஜினாமாக் கடிதத்தைப் பகிர்ந்த தேசிய பாஜக, பதவியை விடக் கடமை பெரியது; அதிகாரத்தை விடச் சேவை உயர்ந்தது! தேசம் முதலில்; கட்சி அடுத்து; தனிநபர் கடைசியில் எனப் பாராட்டியுள்ளது. இதன் மூலம் இது அவருக்குக் கிடைத்த உயரிய அரசியல் பொறுப்பு (ப்ரோமோஷன்) என்பது தெளிவாகிறது. கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் திரளும் தொண்டர்களின் கூட்டமும் இதை உறுதிப்படுத்துகிறது.
"கூலி வேலை செய்தவரின் மகனுக்கு கிடைத்த பாக்கியம்"
பிரதமர் மோடிக்கு 13/10/2026 அன்று எல். முருகன் எழுதிய உருக்கமான கடிதத்தில், எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தாய்-தந்தை கூலி வேலை செய்தும் மாடு மேய்த்தும் வளர்த்த எனக்கு, மத்திய அரசில் பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. ABVP மற்றும் பாஜகவில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.
தங்களின் அர்ப்பணிப்புள்ள ஆட்சி திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. சென்னை மெட்ரோ, தூத்துக்குடி துறைமுகம், 26 அமிர்த பாரத் ரயில் நிலையங்கள், காசி/சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், செங்கோல் நிறுவியது மற்றும் தமிழர்களுக்கு ஆளுநர், அமைச்சர் பதவிகள் வழங்கி நீங்கள் அங்கீகரித்துள்ளீர்கள். 2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளை வென்று மீண்டும் தங்களின் ஆட்சி அமைய முழு நேரப் பணியாற்ற விரும்புகிறேன். எனவே, என்னை அமைச்சர் மற்றும் எம்.பி பதவிகளில் இருந்து விடுவிக்க வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

