இஸ்ரோவின் புதிய தலைவராக வி நாராயணன் நியமனம்; யார் இவர்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அப்துல் கலாம் முதல் சந்திரயான் 3 இன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வரை பல தமிழர்கள் இஸ்ரோவில் சாதனை படைத்துள்ளனர். தற்போது வி.நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
APJ ABDUL KALAM
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் உச்சக்கட்ட வளர்ச்சியை பல நாடுகள் வியந்து பார்த்து வருகிறது. அப்படி உலகம் முழுவதும் இந்தியாவின் பெயர் பரவியதற்கு தமிழர்களின் பங்கு முக்கியமானது அந்த வகையில் அப்துல்காலம் தொடங்கி பி.வீரமுத்துவேல் வரை பலரும் சாதித்துள்ளனர். முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் இஸ்ரோவின் தொடக்கக் காலம் முதல் ‘ரோகிணி-2’ செயற்கைக்கோள் வெற்றிகரமான ஏவியவர், ராக்கெட்டுக்கான திட எரிபொருள் ஆராய்ச்சியில் அப்துல் கலாமின் பங்கு முக்கியமானது.
ISRO
இஸ்ரோவில் தமிழர்கள்
இதனையடுத்து மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்திரயான்’-1, ‘மங்கள்யான்’ செயற்கைக் கோள்களுக்கான திட்ட இயக்குநராகவும் பங்காற்றினார். ந.வளர்மதி, 2011இன் ஜிசாட்-12 பணியின் திட்ட இயக்குநர் உள்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அடுத்தாக அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, இஸ்ரோவின் தலைவராக உயர்ந்தவர் கே.சிவன். இவரது பதவி காலத்தில் தான் முதன் முதலாக சந்திரயான் நிலவுக்கு அனுப்பப்பட்டது. மற்றொரு நபர் தான் வனிதா முத்தையா, சந்திரயான் - 2 பணியின் திட்ட இயக்குநராக இருந்தவர்.
isro sivan
விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள்
நிகர் ஷாஜி சூரியனை ஆராயும் ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக இருக்கிறார். அடுத்தாக பி.வீரமுத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த முதல் நாடு என்கிற பெருமைக்குரிய சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர். என பல்வேறு பெருமைகள் கொண்ட விண்வெளித்துறையில் அடுத்ததாக இஸ்ரோ தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
VEERAMUTHU VEL
இஸ்ரோ புதிய தலைவர் யார்.?
இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து வருகிற ஜனவரி 14ஆம் தேதி நாராயணன் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாராயணன், 1984 ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலான விண்வெளித்துறையில் அனுபவம் கொண்டவர், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இஸ்ரோவின் முக்கிய திட்டங்களான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
V NARAYAN
யார் இந்த நாராயணன்
தற்போது வி.நாராயணன் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் நாராயணன் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள மேலக்காட்டு கிராமத்தில் பிறந்தவர். டாக்டர் வி. நாராயணன் தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரில் முடித்தார். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் (டிஎம்இ) முதல் ரேங்க் பெற்றார். கூடுதலாக, அவர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (AMIE) ல் இருந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அசோசியேட் மெம்பர்ஷிப் பெற்றார்.
கிரையோஜெனிக் இன்ஜினியரிங்கில் முதுகலை தொழில்நுட்பத்தை (எம்.டெக்) மேற்கொள்வதற்காக, இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) காரக்பூரில் பயின்றார். எம்.டெக் பட்டப்படிப்பு முடித்துள்ளார். பட்டப்படிப்பில் வெள்ளிப் பதக்கம் மற்றும் முதல் ரேங்க் பெற்றார். டாக்டர் நாராயணன் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.