- Home
- Tamil Nadu News
- திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா.? காத்திருக்கும் கட்சிகள்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா.? காத்திருக்கும் கட்சிகள்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
திமுக எம்பி திருச்சி சிவாவின் காமராஜர் குறித்த கருத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் திருச்சி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர், இதன் காரணமாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கிய கட்சியாக அங்கம் வகித்து வருகிறது. இந்தக் கூட்டணி 1980, 2004, 2009, 2019, மற்றும் 2024 ஆகிய பொதுத் தேர்தல்களில் வெற்றிக்கூட்டணியாக அமைந்தது. இது மட்டுமில்லாமல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றது.
குறிப்பாக 2004இல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 39 தொகுதிகளில் 38 இடங்களை வென்றது, இதில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களை வென்றது. அதே நேரம் 2014 பொதுத் தேர்தலில் போது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிவு
இதனால் திமுக தனித்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் போட்டியிட்ட ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை, இது காங்கிரஸ் இல்லாததால் ஏற்பட்ட பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. இதனையடுத்து 2016 சட்டமன் தேர்தலின் போது இந்த கூட்டணியானது மீண்டும் தொடங்கியது. தற்போது வரை இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்றுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு மற்றும் ஆட்சி பகிர்வு தொடர்பாக ஒரு சில கருத்து வேறுபாடுகள் காங்கிரஸ் - திமுக இடையே அவ்வப்போது எழுந்து வருகிறது. எனவே 2026ஆம் அண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது நடிகர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணையலாமா என காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ரகசிய ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.
திருச்சி சிவா சர்ச்சை கருத்து
இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக எம்பி திருச்சி சிவா பேசிய ஒரு கருத்து கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திருச்சி சிவா, காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும் . அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய கருணாநிதி உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
இந்த பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டதாக திருச்சி சிவா கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
திருச்சி சிவா வீடு முற்றுகை
திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள சிவா எம் பி யின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் காங்கிரசார் திருச்சி சிவா எம்பி வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இதை போல பாமக தலைவர் அன்புமணி திமுக மன்னிப்பு கேட்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் காமராஜர் தொடர்பான கருத்திற்கு திருச்சி சிவா விளக்கம் அளித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி வருகிறது.