- Home
- Tamil Nadu News
- எவ்வளவு சொல்லியும் மணிகண்டன் கேட்கல! என்கவுண்டரில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!
எவ்வளவு சொல்லியும் மணிகண்டன் கேட்கல! என்கவுண்டரில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!
உடுமலை அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலுவை கொலை செய்த வழக்கில் குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறையினரை அரிவாளால் தாக்கி தப்ப முயன்றபோது இந்த என்கவுண்டர் நடந்ததாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் மூர்த்தியும் அவரது மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலு சமாதானப்படுத்தி காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது மணிகண்டன் எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலுவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குற்றவாளிகள் அங்கிருந்து தப்பித்தனர். இவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே உப்பாறு ஓடையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதில், சப் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் காயமடைந்தார். பின்னர் காவலர்கள் நடத்திய என்கவுண்டரில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து காயமடைந்த காவலர் சரவணகுமார் கூறுகையில்: மணிகண்டனை கைது செய்துவிட்டு ஆயுதங்களை கைப்பற்ற சென்ற போதுதான் என்கவுண்டர் நடந்தது. அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் வெட்டினான் மணிகண்டன். என் மீது தாக்குதல் நடத்திய பின்னரும் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் தான் சுட்டார் என்றார்.