காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன..? வெளியான புதிய பட்டியல்
ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி, சிறுதானியங்கள், காய்கறிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் உணவு வகைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் செம்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கிடைக்கும் வகையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பெரும்பாலான பொதுமக்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
17 லட்சம் மாணவர்கள் பயன்
காலை உணவு திட்டம் ரூ.404.41 கோடி செலவில் 31.008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அப்போது மாணவர்களுக்கு உணவை பரிமாறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
உணவு பட்டியல் என்ன.?
இந்த திட்டத்தின் படி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா:
செவ்வாய் கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி
சிறு தானியங்கள்- இனிப்புகள்
புதன்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல் / வெண் பொங்கல்;
வியாழக்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா / ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா;
வெள்ளிக்கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
வராத்தில் 2 நாட்கள் சிறு தானியம்
ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா. மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.