திருச்சியை மாற்ற இருக்கும் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம்; என்னென்ன வசதிகள்: எப்போது திறப்பு முழுவிவரம்
திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 404 பேருந்துகள் நிறுத்தும் வசதி, கடைகள், ஓய்வறைகள் எனப் பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் திறப்பு விழா காண உள்ள இந்த நிலையத்திற்கு 'கலைஞர் பேருந்து நிலையம்' எனப் பெயரிடப்படலாம்.
திருச்சியை மாற்ற இருக்கும் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம்; என்னென்ன வசதிகள்
திருச்சியில் போக்குவரத்து நெரிசல்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழில் வளர்ச்சி காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தினந்தோறும் சென்று வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மத்தியில் உள்ள இடம் தான் திருச்சி, எனவே தமிழகத்தின் தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என பலரும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு பயணம் செல்லும் மக்கள் திருச்சியை தாண்டித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கும் திருச்சி
இதனால் மக்கள் தொகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது திருச்சி பேருந்து நிலையங்கள். அந்த வகையில் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்களாக உள்ளன. திருச்சி நகரின் மையப்பகுதிகளில் இந்த இரண்டு பேருந்து நிலையங்களும் இருப்பதால் வெளியூரில் இருந்து ஊருக்குள் வருகிற பேருந்தும், திருச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளால் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். இதனால் திருச்சியில் முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காலம்
இதனையடுத்து தான் திருச்சி மக்களுக்கு போக்குவரத்து பிரச்சனையில் இருந்து விடிவு ஏற்படும் வகையில் மிகப்பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.50 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ.140 கோடியும் தமிழக நிதி மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்பில் ரூ.159 கோடி கடனாகவும் பணிகள் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம்
இந்த புதிய பேருந்து நிலையத்தில் காத்திருப்பு அறை, மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளிரூட்டபட்ட தங்கும் அறைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் என பிரமாண்டமாக தயாராகி வருகிறது. குறிப்பாக ஒரே நேரத்தில் 404 பேருந்து நிறுத்துவதற்கான வசதியுள்ளது.
மேலும் அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் வந்து பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டடுமான பணிகள் பெரும் பகுதி முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா, கலைஞர் சிலைகள் அமைப்பது, தரைத்தளத்தில் டைல்ஸ் பதிப்பது, மின்விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட இறுதிகட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் திறப்பு விழா
மேலும் புதிய பேருந்து நிலையத்தில் வணிகப் பயன்பாட்டிற்காக அங்கு 70 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பேருந்து நிலையம் என பெயர் சூட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு திறப்பு விழாவிற்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.