- Home
- Tamil Nadu News
- ஒரு குஸ்கா 100 ரூபா..! சாப்பாடு, தண்ணி இல்லாமல் அல்லல்படும் டி.வி.கே மகளிர் அணி பெண்கள்
ஒரு குஸ்கா 100 ரூபா..! சாப்பாடு, தண்ணி இல்லாமல் அல்லல்படும் டி.வி.கே மகளிர் அணி பெண்கள்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் நிலையில், மாநாட்டில் குவிந்துள்ள தொண்டர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

TVK மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் தொடங்குகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக ரசிகர்கள், தொண்டர்கள் நேற்று நள்ளிரவு முதலே சாரை சாரையாக வந்து குவிந்து வருகின்றனர். மாநாட்டுக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு ஸ்நேக்ஸ் கிட் வழங்கப்படுகிறது. அந்த கிட்.ல் குடிநீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட், மிச்சர் உள்ளிட்டவை இடம் பெற்றள்ளன.
மாநாட்டில் குடிநீர், ஸ்நாக்ஸ்
ஸ்நாக்ஸ் கிட், தண்ணீர் ஆகியவை மாநாடு நடைபெறும் 3 மணி முதல் 7 மணி வரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
காலியான தண்ணீர் தொட்டி
இதனால் பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் காலியாகிவிட்டதாக தொண்டர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மாநாட்டில் பங்கேற்றுள்ள பெண்கள் முறையான உணவு இல்லாததால் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உணவகங்களில் உணவை வாங்குகின்றனர்.
அதிக விலைக்கு விற்கப்படும் உணவு
தற்காலிக உணவகங்களில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், குஸ்கா உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் இரு மடங்கு, 3 மடங்கு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தயிர்சாதம், புளிசாதம், லெமன் சாதம் உள்ளிட்டவை 70 ரூபாய்க்கும், குஸ்கா, வெஜிடபில் ரைஸ் உள்ளிட்டவை 100 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
அதிக விலை கொடுத்து உணவு வாங்கினாலும் அவை தரமற்ற முறையில் இருப்பதால் அதனை வாயில் வைக்க முடியவில்லை என்று கூறி வேதனைப்படுகின்றனர்.