- Home
- Tamil Nadu News
- We Stand with விஜய்..! தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டும் விஜய் ரசிகர்கள்.. திமுகவுக்கு பதிலடி
We Stand with விஜய்..! தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டும் விஜய் ரசிகர்கள்.. திமுகவுக்கு பதிலடி
கரூர் துயர சம்பவம் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

TVK Vs DMK மாறி மாறி குற்றச்சாட்டு
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழக அரசு மீது தமிழக வெற்றி கழகமும், நாங்கள் சொன்ன நிபந்தனைகளை விஜய் பின்பற்றவில்லை அதனால் தான் தான் அசம்பாவிதம் ஏற்பட்டது என தமிழக அரசும் என பரஸ்பரம் மாறி மாறி குற்றச்சாட்டுகளை மாறி மாறி தெரிவித்து வருகின்றன.
விசாரணை ஆணையம் அமைப்பு
இதனிடையே அசம்பாவிதம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசும், 8 எம்.பி.கள் கொண்ட உண்மைக் கண்டறியும் குழுவை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அமைத்துள்ளன. மேலும் சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், பிரசார வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விஜய்யை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை
இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக விசிக தலைவர் திருமாவளவன், விஜய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். விஜய் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி பரபரப்பை எகிறவிட்டுள்ளார்.
Stand with Vijay
இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் We Stand with Vijay (நாங்கள் விஜய் உடன் இருக்கிறோம்) என்ற சுவரொட்டியை தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். மேலும் விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பி வரும் நிலையில், வரும் காலத்தில் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் செல்லலாம் என்று கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.