ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க இனி புதிய நடைமுறை.! என்னென்ன தெரியுமா.?
தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் 100% ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடையில் மானிய விலையில் உணவு பொருட்கள்
ரேஷன் கடைகளில் அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் நியாயவிலைக்கடைகளில் 100 விழுக்காடு ரேகை பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெறுவது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை
இந்த நிலையில் இந்த உத்தரவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாய விலைக்கடைகளில் மின்னணு எடை தராசும், நியாய விலைக்கடை அங்காடி பி.ஓ.எஸ் இயந்திரம், புதியதாக இணைக்கப்பட்டுள்ள ப்ளூ டூத் வாயிலாக அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி புதிய உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இதனால் ஒரு குடும்ப அட்டைக்கு அத்தியாவசியம் பொருட்கள் வழங்குவதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது. இந்த உத்தரவினால் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
100 விழுக்காடு ரேகை பதிவு
அதுமட்டுமின்றி, ஆதார் சரிபார்பு, விரல் ரேகை பதிவு, ஏற்கனவே 40 விழுக்காடு ரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கி பொது மக்களுக்கு எவ்வித சிரமம் இல்லாமல் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அரசின் புதிய உத்தரவால், தற்போது, 100 விழுக்காடு ரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவினால், வயதானவர்கள், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
ஆதார் 40 விழுக்காடு முறையை மீண்டும் செயல்படுத்தனும்
எனவே, இந்த புதிய உத்தரவை மாற்றி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, ஆதார் 40 விழுக்காடு முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதேநேரம், கடைகளுக்கு வரும் பொருட்களின் எடையையும் உறுதிப்படுத்தி, சரி பார்க்க வேண்டும்.இதனால், எடை குறைவாக வரும் பொருட்களுக்கு கடை ஊழியர்கள் தான் பொறுப்பேற்கும் அவலம் நீடிக்கிறது.கடை ஊழியர்கள் வீண் பழிக்கும், நடவடிக்கைக்கும் ஆளாகும் நிலை உள்ளது. எனவே, சரியான எடையில் தரமான பொருட்களை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.