Aadhav Arjuna Vs DMK: ஆதவ் அர்ஜுனாவை வைத்து திமுகவுக்கு ஆட்டம் காட்டும் விசிக! திருமாவின் ரியாக்ஷன் என்ன?
Aadhav Arjuna Vs DMK: சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா தமிழக அரசின் ஏற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் திமுக - விசிக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுமார் 10 லட்சத்திற்கும் அதிக பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயிலால் 200க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுக்தைகள் கட்சியும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.
இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா, அமைச்சரவையில் பங்கு குறித்தும், வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது. மேலும் சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஆக கூடாதா கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துகள் திமுக - விசிக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், வன்னி அரசு உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியிருந்தனர். ஆனால், தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக சொன்ன ஆதவ் அர்ஜூனா ராசா குறித்தும் விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காத்திருந்த நிலையல் தற்போது மீண்டும் ஆதவ் அர்ஜுனா ஆளும் திமுக அரசை சீண்டும் வகையில் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா இப்படி பேசி வருவது திருமாளவனின் அரசியல் ஆட்டமே என அரசியல் விமர்சர்கள் கூறிவருகின்றனர்.
ஏனென்றால் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக 200 தொகுதிகளில் களம் இறங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், தங்களின் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதால் கடந்த முறையை போல 10 தொகுதியில் போட்டியிடாமல் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறவே இப்படி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி திமுக அதிக தொகுதிகளை கொடுக்க மறுக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்கு செல்லவும் விசிக முடிவு செய்துள்ளதன் காரணமாகவே ஆதவ் அர்ஜுனாவை வைத்து இப்படி அரசியல் ஆட்டத்தை திருமாவளவன் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.