இன்றைய TOP 10 செய்திகள்: லடாக் வன்முறை முதல் பைரப்பா மறைவு வரை
லடாக்கில் மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது, மேலும் 2021-23 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன், பிரபல கன்னட நாவலாசிரியர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமான செய்திகளும் இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.

லடாக் போராட்டத்தில் வெடித்த வன்முறை
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சிறப்பு பாதுகாப்பு கோரி லே பகுதியில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்ததுடன், ஒரு வாகனத்தையும் எரித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். சோனம் வாங்சுக், வன்முறையை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு உதவியவர் கைது!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தளவாட உதவிகளை வழங்கிய முகமது கட்டாரியா என்பவரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது. "ஆபரேஷன் மகாதேவ்" மூலம் மீட்கப்பட்ட ஆயுதங்களின் தடயவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17 ஏழை பெண்களை சீரழித்த சாமியார்!
டெல்லியில் உள்ள பிரபல ஆசிரமத்தின் இயக்குனரான சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியார் மீது 17 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
எஸ்.எல். பைரப்பா காலமானார்
பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 94.
எஸ்.எல். பைரப்பா, 'வம்சவ்ரிக்ஷா', 'தாத்து', 'பர்வா', 'மந்தாரா' போன்ற பல பிரபலமான நாவல்களை எழுதியுள்ளார். அவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் ‘பருவம்’, ‘தாண்டு’, ‘வம்ச விருட்சம்’, ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, ‘திரை’, ‘பிளவு’ ஆகிய நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன.
தோற்றாலும் பரவாயில்லை...
2006ல் கலைஞர் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான சீட்டு கொடுத்ததால் பெரும்பான்மைக்கான இடங்களை பெற முடியாத சூழ்நிலை வந்தது. இதை புரிந்து வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், 2021-லயே காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தார்.
லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்
விஜயலட்சுமி தொடர்பான வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல்துறை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
வாயே திறக்காத விஜய்
புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் திமுக எதிர்ப்பு அரசியலை செய்யவில்லை. மாறாக திமுக வெறுப்பு அரசியலையே மேற்கொள்கிறார். இது தமிழகத்தில் எடுபடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இப்போது விஜய் ஈழத்தமிழர்களை வைத்து பரிதாபம் தேடிக்கொள்ம் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் உணர்வு உண்மையான உணர்வாக இருந்திருந்தால் அப்போதே வெளிப்பட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பீலா வெங்கடேசன் திடீர் மரணம்!
தமிழகத்தில் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 56 வயதான பீலா வெங்கடேசன், தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக இருந்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.