- Home
- Tamil Nadu News
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்வர் புகழ் பாடும் கேள்வியால் வெடித்தது சர்ச்சை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்வர் புகழ் பாடும் கேள்வியால் வெடித்தது சர்ச்சை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் முதல்வரை 'தாயுமானவர்' என அழைக்கக் காரணமான திட்டம் குறித்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்வர் புகழ் பாடும் கேள்வியால் வெடித்தது சர்ச்சை!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,540 காலி பணியிடங்களுக்காக செப்டம்பர் 14ம் தேர்வு நடைபெற்றது. இதற்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை. இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது.
TNPSC
இதனையடுத்து குரூப் 2 மற்றும் 2ஏ முதல் தாள் மற்றும் குரூப் 2ஏ இரண்டாம் தாள் கடந்த 2025 பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 82 மையங்களில் நடந்த தேர்வை 21,564 அனுமதிக்கப்பட்ட நிலையில், 20,469 பேர் தேர்வை எழுதினர். இதில் குரூப் 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தற்போது சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
tnpsc
தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று 88வதாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கான விடைகளாக பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத் திட்டம், நீங்கள் நலமா? மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட விடைகள் கொடுக்கப்பட்டன. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: குரூப் 2 ஏ தேர்வில் முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி இடம்பெற்றிருப்பதாக புகார் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா ? அல்லது திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா? தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குருப் 2 ஏ தேர்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழை பாடும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
mk stalin
அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், முதலமைச்சரின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கும் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா ? அல்லது அரசுப்பணிகளில் இருந்து கொண்டு திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கலாச்சாரம், நவீன வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் விடுதலைப் போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன் போன்ற பாடத்திட்டங்களோடு, முதலமைச்சரின் புகழ் பாடவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா? என அரசுப்பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் அந்தந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்விகள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்வதோடு, அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.