ஆளுநரின் அடுத்த ஆட்டம்! டெல்லி பறந்த கருணாநிதி பல்கலை மசோதா!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியது. தற்போது, இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என, அதிமுக, பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று, கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
சட்ட மசோதா தாக்கல்
இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். அவரே பல்கலைக்கழகத்தின் தலைவர், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பார். வேந்தரின் முன் அனுமதி இல்லாமல் கவுரவப் பட்டங்கள் வழங்க முடியாது. உயர்கல்வித் துறை அமைச்சர் இணை வேந்தராக செயல்படுவார்.
ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய மசோதா
துணை வேந்தரைத் தேர்வு செய்வதற்கான குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர், மற்றும் சிண்டிகேட் பிரதிநிதியாக ஒரு மாநில அல்லது மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவார்கள். இக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணை வேந்தரை வேந்தர் நியமிப்பார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.