- Home
- Tamil Nadu News
- கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எப்போது? எங்கிருந்து தெரியுமா?
கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எப்போது? எங்கிருந்து தெரியுமா?
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 3-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.

கார்த்திகை தீப திருவிழா
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திக்கை தீப திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 30ம் தேதி அதாவது 7ம் நாளில் விநாயகர் தேர், முருகர் தேர், அண்ணாமலையார் தேர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர்களும் மாடவீதியில் வலம் வரும். விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 03-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்த கார்த்திகை தீப திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்.
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
முன்பதிவு தொடங்குகிறது
விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். மேலும் தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதில் முன்பதிவு வசதி கொண்ட ரயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

