- Home
- Tamil Nadu News
- திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு எங்கிருந்து எத்தனை பேருந்து? எப்போது இயக்கம்! வெளியான அறிவிப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு எங்கிருந்து எத்தனை பேருந்து? எப்போது இயக்கம்! வெளியான அறிவிப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 35 முதல் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தளமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். அக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அதில், 6ம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேரிலும், டிசம்பர் 30ம் தேதி அதாவது 7ம் நாளில் விநாயகர் தேர், முருகர் தேர், அண்ணாமலையார் தேர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக அண்ணாமலையார் கோயில் மாடவீதியில் வலம் வரும்.
டிசம்பர் 03-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு 35 முதல் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் தொலைதூர பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்து இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.
அதேபோல, திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.
இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணைய தளங்களின் மூலமாக, இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 94450 - 14426, திருநெல்வேலி 94450 - 14428, நாகர்கோவில் 94450 - 14432, தூத்துக்குடி 94450 - 14430, கோயம்புத்தூர் 94450 - 14435, சென்னை தலைமையகம் 94450 - 14463 மற்றும் 94450 - 14424 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

