வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி; செங்கோட்டை-கேரளா சாலை துண்டிப்பு; சபரிமலை பக்தர்கள் தவிப்பு!
கனமழை காரணமாக திருநெல்வேலி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கின்றன. செங்கோட்டை-கேரளா சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சபரிமலை பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
Flood in Tirunelveli
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழப்பும் ஏற்பட்டது.
அதன்பிறகு தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மழை மீண்டும் வெளுத்து வாங்கி வருகிறது. கடலூர். விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வெருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
Heavy Rain In Tamilnadu
நெல்லையில் கடந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. இப்போது அதேபோன்று மழை பெய்து வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறுக்குத்துறை முருகன் கோயிலை தண்ணீர் சூழ்ந்து மூழ்கடித்துள்ளது.
மேலும் நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ அதிதீவிர மழை கொட்டியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!
Heavy Rains
இதேபோல் தென்காசி மாவட்டம் முழுவதும் இரவு முதல் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், தென்காசி, செங்கோட்டை நகர பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் கொட்டும் கனமழையால் குற்றால மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இடைவிடாமல் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் செங்கோட்டை அருகே கேரளா சாலையின் ஓரம் உள்ள குளம் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் செங்கோட்டை கேரளா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.
Rain in chennai
இதனால் சபரிமலையில் இருந்து வாகனங்கள் மூலம் செங்கோட்டை வரும் ஐயப்ப பக்தர்கள் நடுவழியில் பரிதவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் செல்ல முடியாமல் செங்கோட்டையில் நிறுத்தப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை கொட்டியுள்ளது. செங்கோட்டையில் 24 செ.மீ மழையும், தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ மழையும் பெய்துள்ளது.