தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்! பயணிகளே நோட் பண்ணிக்கோங்க!
தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைக்க உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Tamil Nadu Trains Time changes
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. நாடு முழுவதும் தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் இருக்கும் நிலையில், பல்வேறு ரயில்கள் தினசரி கால அட்டவணைப்படி இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டு ரயில்கள் நேரம் மாற்றம்
இந்நிலையில், தெற்கு ரயில்வே தமிழ்நாட்டில் 5 முக்கிய ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களும் அடங்கும். இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.
சென்னை சென்டிரலில் இருந்து தினமும் இரவு 9.40 மணிக்கு கேரளாவின் பாலக்காடு வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22651) ஜூலை 11ம் தேதி முதல் திண்டுக்கலுக்கு அதிகாலை 5.55 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 6.33 மணிக்கு பதிலாக 6.01 மணிக்கும், பழனிக்கு 7 மணிக்கு பதிலாக 6.25 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 7.52 மணிக்கு பதிலாக 7.35 மணிக்கும், பாலக்காடுக்கு 9.30 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 20601) ஜூலை 11ம் தேதி முதல் திண்டுக்கல்லுக்கு காலை 5.57 மணிக்கு பதிலாக 5.47 மணிக்கும், மதுரைக்கு 7.10 மணிக்கு பதிலாக 6.40 மணிக்கும், தேனிக்கு 8.28 மணிக்கு பதிலாக 8.03 மணிக்கும், போடிநாயக்கனூருக்கு 9.10 மணிக்கு பதிலாக 8.55 மணிக்கும் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மைசூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்
ஜூலை 11ம் தேதி முதல் பொள்ளாச்சி - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் (வ.எண்: 56110) பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு கோவைக்கு 8.55 மணிக்கு சென்றடையும்.
மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (வ.எண்: 16236) ஜூலை 11ம் தேதி முதல் தூத்துக்குடிக்கு காலை 10.35 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு செல்லும். மேலும் செயல்பாட்டு காரணங்களுக்காக பாலக்காடு டவுன் - கோயம்புத்தூர் மெமு ரயில் (வ.எண்: 66606) காலை 9.10 மணிக்கு வந்து சேரும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்படும்.