- Home
- Tamil Nadu News
- எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் காரணமாக, பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உழவன், அனந்தபுரி, சேது உள்ளிட்ட முக்கிய ரயில்கள் டிசம்பர் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில், கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில், ராமேசுவரத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் டிசம்பர் 14-ம் தேதி வரையில் தாம்பரம் வரை இயக்கப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
* எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
* குஜராத் மாநிலம் அகமதாபாத் – திருச்சி வாரம் தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் ரயில் டிசம்பர் 11-ம் தேதி அன்று காட்பாடி, வேலூர், விழுப்புரம் என மாற்றுப் பாதையில் செல்வதால் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டுக்கு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

