ஆசிரியர்கள் இனி தப்பிக்கவே முடியாது! சாட்டையை சுழற்றும் கல்வித்துறை!
மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை. இதனால் தமிழக அரசு பயோமெட்ரிக் முறையை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. பள்ளிக்கு வராமல் மாற்று நபர்களை வைத்து பாடம் எடுத்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக அரசு சார்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாணவர்களுக்கு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆசிரியர் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆனால், மாணவர்களுக்கு வழிகாட்டிய இருக்க வேண்டிய ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை. ஆசிரியர்கள் தாமதமாக பணிக்கு வருவதும் முன்கூட்டியே புறப்பட்டு செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக புகார்களும் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மீண்டும் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முறையாக பள்ளிக்கு வராமல் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் மாற்று நபர்களை வைத்து பாடம் எடுத்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கரிமங்கலம் வட்டாரம் ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் மாற்று நபர்களுக்கு குறைந்த சம்பளம் பேசி பள்ளியில் வேலைக்கு வைத்து கொள்ளவதாக தகவல் வெளியானது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவம் அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறுநபர் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டால் அல்லது இதுசார்ந்த புகார்கள் பெறப்பட்டால் அதன் மீது தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நடைபெறும் போது அதன் விவரத்தை உயர் அதிகாரிகளுக்கு வழங்க தவறும் பட்சத்தில் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீதும் துறைசார்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.