Teachers Day 2026: ஆசிரியர் தினம்..தேசிய விருது பெறும் ஆசிரியர்கள் யார்?
Teachers Day 2026: இந்தியாவில் கல்வியில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்களைக் கெளரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருது 2026 வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தினம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தேசிய ஆசிரியர் விருதுகள் 2026
இந்தியாவில் கல்வியில் சிறந்த பங்களிப்பை வழங்கிடும் ஆசிரியர்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று (ஆசிரியர் நாள்) தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுகள் பெறுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 48 (26 ஆண்கள், 22 பெண்கள்) பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தமாக 27 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 6 மத்திய அரசு அமைப்புகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு வரும் செப்டம்பர் 5, 2026 ஆசிரியர் தினத்தன்று, புதுடெல்லிவிஞ்ஞான் பவனில் (Vigyan Bhawan) நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பெருமை
2026 தேசிய ஆசிரியர் விருது பட்டியலில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், புலியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் எம். தங்கராஜ் மற்றும் மதுரை பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா (PM SHRI Kendriya Vidyalaya) பள்ளி ஆசிரியை ஜே.அமுதா ஆகியோர் இடம்பெற்றுள்ளார். இவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த Viduthalai Veerar R Seenuvasan Government High School ஆசிரியர் கணேசனும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
எப்படி தேர்வு செய்யப்பட்டனர்?
தேசிய ஆசிரியர் விருதுக்கான தேர்வு நடைமுறை மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில், ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் சுய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களின் கற்பித்தல் திறன், புதுமையான முயற்சிகள், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்திய செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
விருதின் நோக்கம்
பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பைச் செய்த ஆசிரியர்களை பொதுவெளியில் கௌரவிப்பதற்காக இந்த விருது திட்டம் கடந்த 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர்கல்வி ஆசிரியர்களுக்கும் விருது
2026 ஆசிரியர் தினத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் தேசிய ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

