கொஞ்சம் உஷாராக இருங்க மக்களே.! ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு கடும் பனிபொழிவு நிலவி வந்தது. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பனி பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் பனி பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை
அதாவது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னலுடன் மழை
அதேபோல் நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஜனவரி 14ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பிநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

