- Home
- Tamil Nadu News
- கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழியர்கள்! வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்கப் போவதாக சூளுரை!
கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழியர்கள்! வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்கப் போவதாக சூளுரை!
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம். அரசு ஊழியர்களை மிரட்ட நினைத்தால் அரசுக்கு தோல்வி தான் கிடைக்கும் என ராமதாஸ் எச்சரிக்கை.

old pension scheme
அரசு ஊழியர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்று தமிழக அரசு நினைத்தால் அரசுக்கு தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பரரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது.
old pension scheme
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்ற முடியாதவை அல்ல; அவை புதிதாக முளைத்த கோரிக்கைகளும் அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகி்ன்றனர். அதுமட்டுமின்றி, திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இப்போது வரை ஒரே ஒரு கோரிக்கையைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.
old pension scheme
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்த நிலையில், அந்தக் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் கடந்த மாதம் 24-ஆம் தேதி அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. அது குறித்து முதலமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
government employee
திமுக அரசின் தொடர் துரோகங்களையும், ஏமாற்று வேலைகளையும் கண்டித்து தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதும், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதும் தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். அதை விடுத்து அரசு ஊழியர்களை மிரட்டி பணிய வைக்கலாம் என்று தமிழக அரசு நினைத்தால் அரசுக்கு தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும்.
old pension scheme
தமிழ்நாட்டு மக்களின் தவிர்க்க முடியாத அங்கம் அரசு ஊழியர்கள் ஆவர். அவர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக சட்டப்பேரவைத் தேர்தலின் போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் 10 விழுக்காட்டைக் கூட இன்னும் நிறைவேற்றவில்லை. மக்களை எவ்வாறு திமுக அரசு ஏமாற்றுகிறதோ, அதேபோல் தான் அரசு ஊழியர்களையும் ஏமாற்ற முயல்கிறது. இனியும் தாமதிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
2021-ஆம் ஆண்டில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியதில் அரசு ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழியர்கள், வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்கப் போவதாக சூளுரை மேற்கொண்டுள்ளனர். அதே மனநிலையில் தான் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டப்படுவது உறுதி என ராமதாஸ் கூறியுள்ளார்.