முன் கூட்டியே வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவு.! எப்போது தெரியுமா.?
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியான நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றதை அடுத்து திட்டமிட்டப்படி மே 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 8ம் தேதி முடிவுகள் வெளியானது.
10ம் வகுப்பு தேர்வு
அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். இவர்கள் 4,113 தேர்வு மையங்கள் தேர்வை எழுதினர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்தது. அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
முன்கூட்டியே வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இந்நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ அல்லது நாளையோ அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு எதுவும் வெளியாகாத பட்சத்தில் ஏற்கனவே அறிவித்தபடி அதாவது மே 19ம் தேதி திங்கள் கிழமை முடிவுகள் வெளியாகும்.