சென்னையில் இன்று இரவு தான்.! ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வெதர்மேன் அலர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வடதமிழக கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பின்னரும் மழை தொடரும்.
RAIN CHENNAI
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இந்த பருவகாலத்தில் முதல் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் வலுவடையவில்லை. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,
வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே நாளை (30-ஆம் தேதி) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
heavy rain
சென்னையில் இன்று கன மழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல நாளை( 30.11.2024) காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடந்த பின்னரும் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
Heavy rain
நாளை கன மழை எங்கே.?
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளி ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
rain
இன்று கனமழை பெய்யும்
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேகங்கள் வலுவாக உருவாகியுள்ளதால் மதியம் மற்றும் மாலை, இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று முதல் 30-ஆம் தேதி வரை, குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் முதல் மரக்காணம் வரையிலான கடலோர பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாளை (30ஆம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் மழைக்கு துல்லியமாக கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.