சொந்த ஊர் பயணம் ரொம்ப ஈஸி: 1,035 சிறப்புப் பேருந்துகள் ரெடி!
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து முக்கிய நகரங்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

1,035 சிறப்பு பேருந்துகள்
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து முக்கிய நகரங்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
வார இறுதி விடுமுறை
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"வருகிற ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், நாளை மறுநாள், ஜூலை 19-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
16,000 பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்
இதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகள் என, மொத்தம் 1,035 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதி நாட்களில் பயணிக்க 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர்.
வெளியூர்களுக்கு சிரமமின்றி பயணிக்க
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்."
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதியில் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.