வேலை இல்லையா.! கடன் உதவியுடன் தொழில் தொடங்க ஓர் வாய்ப்பு- விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
தமிழக அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், சொந்த தொழில் தொடங்கவும் அரசு உதவி வருகிறது. குறிப்பாக, பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தி அதில் சிறந்த முறையில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக அரசு வேலை மட்டுமல்ல தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் புதிய, புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இது மட்டுமில்லாமல் தனியார் துறை வேலைவாய்ப்புக்கான சிறப்பு முகாமையும் தமிழக அரசு தொடர்ந்து அந்த அந்த மாவடங்களிலும் நடத்தி வருகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர் தேர்வு
பிரபல தனியார் நிறுவனமாக டாடா தொழிற்சாலைக்கு பணியாளர் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணியாளர் தேர்வை நடத்தி வருகிறது. இன்று முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க யாரிடமும் வேலை பார்க்காமல் சொந்த தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இது மட்டுமில்லாமல் கடனுதவியும் வழங்கப்பட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது.
பேக்கரி தொழிற்பயிற்சி
தொழிற்சாலை அமைப்பது, சிறு தொழில் செய்வது என பல சிறு தொழில்களுக்கு மானியமாகவும் தமிழக அரசு உதவி செய்து வருகிறது. இந்தநிலையில் உணவு பொருட்கள் விற்பனை தொழில் தமிழகத்தில் கொடி கட்டி பறந்து வருகிறது. அந்த வகையில் பேக்கரி ஷாப் கடைகள் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த தொழில் தொடங்க ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வமோடு காத்துள்ளனர்.
அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயற்சியானது வழங்கப்படவுள்ளது. சொந்த தொழில் தொடங்குபவர்களுக்கு "பேக்கரி பொருட்கள் பயிற்சி" பற்றிய 3 நாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கற்றுத்தரப்படும் உணவு வகைகள் என்ன.?
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள் தயாரிப்பது, கருவிகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாடு குறித்து கற்றுத்தரப்படும். மேலும் பிரபல பிஸ்கட்களான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள் போன்றவை தயாரிப்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சி வகுப்பில் வல்லுநர்கள் பயிற்சியாளர்களுக்கு விளக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தயாரிக்கப்பட்ட பேக்கரி உணவு பொருட்களை விற்பனை செய்வது. உணவு பொருட்களை பாதுகாப்போடு பேக்கிங் செய்வது மற்றும் அதற்கான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக வழிமுறைகளும் கற்றுத்தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் உரசு வழங்கும் கடனுதவி மற்றும் மானியம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
மேலும் பேக்கரி தொழில் பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி ஏற்பாடு செய்து தரப்படும் எனவும். இது தேவையுள்ளார் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பயிற்சி வகுப்புகள் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும், பயிற்சி வகுப்பு காலை காலை 9:30 - மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கரி தொழில் பயிற்சி தொடர்பாக தெரிந்து கொள்ள www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.