தமிழகத்தில் தீபாவளி பட்டாசு எந்த நேரத்தில் வெடிக்கலாம்.? கட்டுப்பாடுகள் என்ன.? வெளியான அறிவிப்பு
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல்நலக் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடித்தல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசு அந்த வகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி அளவிற்கு பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தில் காலை வெடிக்க தொடங்கினால் இரவு முழுவதும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள்.
அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர். காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் பறவை மற்றும் விலங்குகளும் அதீத சத்தத்தின் காரணமாக பரிதவிக்கும் நிலையும் உருவாகிறது.
Online Crackers
பட்டாசு - கட்டுப்பாடுகள் விதிப்பு
இதன் காரணமாகவே பட்டாசு வெடிப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும்,
வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும் பட்டாசு மூலம் ஏற்படும் மாசுக்கள் தொடர்பாகவும், காற்றின் தரம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள்
இதனை தொடர்ந்தும் தமிழக அரசு சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயித்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் வழக்கு பதிவு செய்து கைதும் செய்யப்பட்டனர். இந்த வகையில் தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
fire crackers
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
Fire crackers
தவிர்க்க வேண்டியவை
1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.