- Home
- Tamil Nadu News
- SETCயில் Volvo சொகுசு பேருந்துகள்! அடுத்த தலைமுறைக்கு அப்டேட்டாகும் அரசு போக்குவரத்து கழகம்
SETCயில் Volvo சொகுசு பேருந்துகள்! அடுத்த தலைமுறைக்கு அப்டேட்டாகும் அரசு போக்குவரத்து கழகம்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக சொகுசு வால்வோ பேருந்துளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பயணம் கூடுதல் சொகுசு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட் ஆகும் அரசு போக்குவரத்து கழகம்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (SETC) அப்டேட் செய்யும் விதமாக புதிய சொகுசு பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சொகுசு பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. இதில் சொகுசு பேருந்து உற்பத்தி நிறுவனமான வால்வோ மட்டுமே பங்கேற்று பேருந்துக்கான கட்டணத்தை அரசிடம் வழங்கி உள்ளது. நிறுவனம் வழங்கிய மதிப்பீடு அரசுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் முதல் கட்டமாக 20 சொகுசு பேருந்துகள் வாங்கப்படும்.
சோதனை முறையில் சொகுசு பேருந்துகள்
சோதனை முறையில் கொள்முதல் செய்யப்படும் 20 சொகுசு பேருந்துகளும் சென்னை -பெங்களூரு, சென்னை - கோவை, சென்னை - மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளுக்கு தனியார் நிறுவனங்கள் வழங்கும் சொகுசு பயணங்களை மிஞ்சும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பேருந்தின் சிறப்பு அம்சங்கள்
இந்தப் பேருந்துகள் BS-VI என்ஜினுடன் வருவதால் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் ஏர் சஸ்பென்ஷன், ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கில் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இந்த பேருந்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் பைகளை வைப்பதற்கு பேருந்தின் அடியில் தாராளமான இட வசதி, பேருந்துகளில் Wifi வசதி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
தனியார் பேருந்துகளுடன் போட்டி போடும் அரசு பேருந்துகள்
பேருந்தில் 51 அல்லது 55 பயணிகள் பயணிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இருக்கைகள் அனைத்தும் திரையரங்குகளில் இருப்பது போன்று சொகுசு வசதியுடன் பொருத்தப்படும். பயணிகள் தாராளமாக நடந்து செல்லும் வகையில் பேருந்தின் நடுவே அகலமான பாதை இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.