- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடையும் விதமாக கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வீடுகள் சேதம், கால்நடைகள் இழப்பு ஆகியவற்றுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

டிட்வா புயல் தாக்கம்
இலங்கையில் பெரும் சேதத்தை உண்டாக்கிய டிட்வா புயல் தமிழக கடலோர பகுதிகள் வழியாக பயணித்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை
டிட்வா புயல் காரணமாக சென்னை, அதன் பிற நகர் பகுதிகள் மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் டிட்வா புயல் காரணமாக கடந்த 27ம் தேதி முதல் 1ம் தேதி (இன்று) வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவாலாக மழை பெய்துள்ளது.
நாகப்பட்டினத்தில் 22.2 செ.மீ, மயிலாடுதுறையில் 13.2 செ.மீ, திருவாரூரில் 10.2 செ.மீ, இராமநாதபுரத்தில் 8.7 செ.மீ தஞ்சாவூரில் 8.6 செ.மீ மழை கொட்டியுள்ளது. இந்த கனமழை காரணமாக் டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.
சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம்
சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர், இந்த நிலையில், மழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள்
அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டேர் வேளாண்பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
வீடுகள், கால்நடைகள் இழப்பிற்கு நிவாரணம்
மேலும் டிட்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

