- Home
- Tamil Nadu News
- Doctor Subbiah Case: டாக்டர் சுப்பையா வழக்கு எதிர்பாராத திருப்பம்! 9 பேரை ரிலீஸ் செய்தது தவறு.. கோர்ட்டில் நடந்தது என்ன?
Doctor Subbiah Case: டாக்டர் சுப்பையா வழக்கு எதிர்பாராத திருப்பம்! 9 பேரை ரிலீஸ் செய்தது தவறு.. கோர்ட்டில் நடந்தது என்ன?
Doctor Subbiah: 2013ல் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், 9 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. இதேபோல் 7 பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. ஆகையால் மரண தண்டனை விதிக்க 7 பேரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் என 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகளுக்கான தண்டனையை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு. குற்றவாளிகளை விடுவித்தது செல்லாது என கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பத்தை தவிர அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு பேரின் வயதை கருத்தில் கொண்டு, தண்டனையை குறைப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்க கால அவகாசம் வழங்கி இருவரின் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

