உலகத் தரத்தில் மதுரை ரயில் நிலையம்! தெற்கு ரயில்வே திட்டத்தின் கிராபிக் காட்சிகள்!
மதுரையில் உள்ள ரயில் நிலையத்தை உலகத் தரத்திற்கு மாற்றி அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை பிரத்யேக வரைகலை சித்தரிப்புடன் விவரிக்கும் தொகுப்பு இது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை ரயில் நிலையம் தமிழகத்தின் பெருமைமிகு சின்னங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மதுரை மீனாட்சி கோயில், அழகர் கோயில் முதலிய பிரபலமான கோயில்கள் உள்ள கோயில் நகரமாகவும் திகழ்வதால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகையும் மிக அதிகம்.
மதுரை ரயில் நிலையத்திற்கு தினமும் சராசரியாக 96 ரயில்கள் வந்து செல்கின்றன. சராசரியாக 51,296 பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தைப் புதுப்பித்து உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் சென்னையைச் சேர்ந்த பி. சி. புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் செப்டம்பர் 22, 2022 அன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. 36 மாதங்களில் இத்திட்டத்திற்கான பணிகள் முடிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பு மும்பையைச் சேர்ந்த டி.யூ.வி. இந்தியா என்று நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் சென்றுவர வசதியாக கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்படவுள்ளன. மூன்று அடுக்குகள் கொண்ட விசாலமான பார்க்கிங் வசதியும் வரவுள்ளது.
பெரியார் பேருந்து நிலையத்துடன் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட இருக்கிறது. கிழக்கு வாயிலில் இரண்டு உயர்மட்ட நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.