நல்லகண்ணுக்கு என்ன ஆச்சு.? அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.! காரணம் என்ன.?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வீட்டில் கீழே விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காதில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவிற்கு வது 100, 1925-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். நாட்டிற்காக பல்வேறு போராட்டங்களிலும் நல்லகண்ணு ஈடுபட்டுள்ளார்.
நிலை தடுமாறி கீழே விழுந்த நல்லகண்ணு
தமிழக அரசின் சார்பாக சுதந்திர தினத்தையொட்டி தகைசால் தமிழர் விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக பெரும்பாலான அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அந்த வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கழிப்பறை செல்ல எழுந்தபோது அவா் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் கட்டிலிலிருந்த இரும்புத் தகடு மீது விழுந்ததின் காரணமாக நல்லகண்ணுவிற்கு காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நல்லகண்ணு
இதையடுத்து உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். காதில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் உடலில் வேறு எங்கேனும் பாதிப்பு உள்ளதா.? என பரிசோதிக்கப்பட்டது. பல்வேறு கட்ட பரிசோதனை செய்யப்பட்டதில், அச்சப்படும் வகையில் பாதிப்பு இல்லையென தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்றைய தினம் வீடு திரும்பியதாக தகவல் கூறப்படுகிறது. நல்லகண்ணு உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.