- Home
- Tamil Nadu News
- செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை உடனடியாக பணி நியமனம் செய்யுங்கள்.. சீமான் கோரிக்கை
செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை உடனடியாக பணி நியமனம் செய்யுங்கள்.. சீமான் கோரிக்கை
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பணி நியமனத்தில் முன்னுரிமை
தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி பணிகளோடு கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணிகளில் கிராமப்புற செவிலியர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அங்கன்வாடி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் கிராம சுகாதாரச் செவிலியருக்கான சிறப்புப் பயிற்சியையும் தமிழ்நாடு அரசு அளித்து வந்தது. அவ்வாறு சிறப்புப் பயிற்சிபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணி நியமனத்தில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டது.
அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம்..?
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களைக் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைத்ததோடு, இனி தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே கிராம சுகாதாரச் செவிலியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தது. இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிராம சுகாதார செவிலியராகப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்காலம் இருண்டுபோனது. அதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் அங்கன்வாடி பணியையும், வருமானத்தையும் விடுத்து 2 ஆண்டுகள் சுகாதாரப் பயிற்சிபெறச் சென்றதால் அங்கன்வாடி பணியில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் கிடைக்கப்பெறாமல் தடைபட்டுப்போனது. இதனால் செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது.
அரசின் அறிவிப்பால் மன உளைச்சல்
மேலும், கிராம சுகாதார செவிலியர்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய முயன்ற திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தடையாணையும் பெற்றனர். இந்நிலையில் அவ்வழக்கினை காரணம் காட்டியே தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், அங்கன் வாடி ஊழியர்களின் தொடர்ப் போராட்டத்தை அடுத்து கடந்த ஆண்டு 1200 அங்கன்வாடி ஊழியர்களை மட்டும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்தது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மீதமுள்ள காலிப்பணியிடங்களில் 1200 செவிலியர் சிறப்பு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டுமென அங்கன்வாடி பணியாளர்கள் போராடி வரும் நிலையில், வெறும் 200 பணியாளர்களை மட்டும் கிராமப் சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்யப்போவதாக வெளிவரும் செய்திகளால், 2021–23, 2022 – 24 ஆம் ஆண்டுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கிராம செவிலியர் பணி நியமனத்தில் திமுக அரசு பாகுபாடு காட்டுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இது தேர்தல் நேரத்து வாக்குறுதியை நிறைவேற்றாமல், சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்..
ஆகவே, தமிழ்நாடு அரசு, சிறப்புப் பயிற்சி பெற்ற 1200 அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும், எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணிநியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். சென்னையில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கின்றேன்.

