- Home
- Tamil Nadu News
- டூயட் பாடிவிட்டு அரசியலுக்கு வரவில்லை MGR! 20 வருஷம் உழைப்பு விஜய்! கூட்டம் ஓட்டாக மாறாது! எஸ்.வி.சேகர்!
டூயட் பாடிவிட்டு அரசியலுக்கு வரவில்லை MGR! 20 வருஷம் உழைப்பு விஜய்! கூட்டம் ஓட்டாக மாறாது! எஸ்.வி.சேகர்!
முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்.வி. வெங்கடராமன் பெயரில் தெருவை திறந்து வைத்ததற்கு நடிகர் எஸ்.வி.சேகர் நன்றி தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்த அவர், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

எஸ்.வி. வெங்கடராமன் தெரு
சென்னை தலைமைச்செயலகத்தில் நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி. வெங்கடராமன் அவர்கள் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி. வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.வி.வெங்கடராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
எஸ்.வி.சேகர்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.வெங்கடராமன் மகனும், நடிகருமான எஸ்.வி.சேகர்: எனது தந்தைக்கு முதல்வர் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும் எனது தந்தை 86 ஆயிரம் யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். பல சமூக சேவைகளை செய்துள்ளார். அதனால் எங்கள் தந்தை வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தோம் அதனை ஏற்று முதல்வர் அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின்
எங்கள் குடும்பத்திற்கு இது வாழ்நாள் கவுரமாக உள்ளது. பொதுவாக கூறுவார்கள் திமுக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என பேசுவார்கள். ஆனால் அது அரசியலாக பேசப்படும் வார்த்தை. எல்லோருக்குமான முதலமைச்சர் என எப்போது கூற ஆரம்பித்தார்களோ அப்போது இருந்து அவர் அப்படித்தான் உள்ளார். அனைத்து சமூகத்தின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எப்போதுமே அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து நிற்பேன் அது எனது வாழ்நாள் கடமை என கூறினார். வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது
எம்ஜிஆர் கோடம்பாக்கத்தில் இருந்து நேரடியாக கோட்டை வரவில்லை. திமுகவின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து பின் சிறு பிரச்சனையால் தனிக்கட்சி ஆரம்பித்து முதலமைச்சரானார். சினிமாவில் டூயட் பாடிவிட்டு நேரடியாக எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால் விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னை தீவுத்திடலில் கண்காட்சிக்கு வரக்கூடிய கூட்டத்தை விடவா விஜய்க்கு கூட்டம் வருகிறது. அவருக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது.
தவெக தலைவர் விஜய்
திருச்சியில் வந்த கூட்டம் நாகப்பட்டினத்தில் வரவில்லை, மனப்பாடம் பண்ணி 3 நிமிடம் படிக்கிறார். அங்கிள் என்கிறார் இது எல்லாம் சினிமாவில் கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும். வாக்காக மாறாது. விஜய்க்கு முதலில் மக்கள் தொடர்பு இருக்க வேண்டும். தொலைபேசி எண்ணை கொடுத்து மக்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க வேண்டும். எழுதிக் கொடுப்பவர் தவறாக எழுதி கொடுக்கிறார். விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும். விஜய்க்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் 15, 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது சரியாக இருக்காது. அரசியலில் 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை அதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது தான் வெளியே வந்து நின்று பேசுகிறார். விஜய்யை தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் என்ன என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் விஜய்க்கு புரிய வைக்கும் என தெரிவித்தார்.