- Home
- Tamil Nadu News
- நவம்பர் 29ம் தேதி ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களுக்கு! 21 செ.மீ. மழை ஊத்தப்போகுதாம்!
நவம்பர் 29ம் தேதி ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களுக்கு! 21 செ.மீ. மழை ஊத்தப்போகுதாம்!
Tamilnadu Red Alert: குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், நவம்பர் 29ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்
தமிழ்நாட்டில் நவம்பர் 29ம் தேதி அதாவது சனிக்கிழமை அன்று 21 செ.மீட்டருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் - இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவுகிறது.
சென்யார் புயல்
இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம்-புதுவை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். நேற்று மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரவு 11.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, இது மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில் "சென்யார்" புயலாக மேலும் வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, காலை 07.30 முதல் 08.30 மணி அளவில் இந்தோனேசியா கடற்கரையை கடந்தது.
கனமழை எச்சரிக்கை மாவட்டங்கள்
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழைக்கு வாய்ப்பு
அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன முதல் மிக கனமழை எச்சரிக்கை
கடலோர தமிழகத்தில் 28ம் தேதி அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
வட தமிழகத்தில் 29ம் தேதி அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1ம்
வட தமிழகத்தில் 30ம் தேதி ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல்
தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

