- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் மீண்டும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்! டெல்டா வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் மீண்டும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்! டெல்டா வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!
Delta Weatherman: தமிழகத்தில் வறண்ட வானிலைக்குப் பிறகு, நவம்பர் 11 முதல் வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். நவம்பர் 12 அன்று காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து மழைக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தொடர்பாக டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன்
இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்: நவம்பர் 11ம் தேதி கிழக்குத் திசை காற்று வந்து சேர்வதும், குளுமையான வடக்கு காற்றும் ஈரப்பதமான கிழக்கு காற்றும் மோதுவதாலும் கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு காற்று குவிதல் ஏற்பட்டு வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்குகிறது.
கடலோர மாவட்டங்கள்
கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் , தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழை வரை பெய்யும், ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. மேலும் உள் தமிழ்நாட்டின் தனிப்பட்ட இடங்களிலும் சில மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை பெய்யும்
அதேபோல் நவம்பர் 12ம் தேதி காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர தமிழக மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும், ஆங்காங்கே ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா விவசாயிகள்
வட கடலோரத்தின் ஒரிரு இடங்களிலும் நாளையும் மழை எதிர்ப்பார்க்கலாம். உள் மாவட்டங்கள் நல்ல மழைக்காக இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.மேலும் தமிழக கடலோர மாவட்ட விவசாயிகள் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் இன்றும், நாளையும் வேளாண் பணிகளை ஒத்கிவைப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.