- Home
- Tamil Nadu News
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்.. முதல் பரிசு என்ன தெரியுமா..?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்.. முதல் பரிசு என்ன தெரியுமா..?
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. இந்த விழாவில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அலங்கநல்லூ் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்
மூகூர்த்தகால் நடப்பட்டதையடுத்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வர்ணம் பூசுவது, கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்க உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக காளையின் உரிமையாளர்கள் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர். காளையை பிடிக்க இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகளை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு
தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் காளைகளுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காளைகளுக்கான தகுதி சான்று வழங்கப்பட்டு வருகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு டிராக்டர் வழங்கப்படும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்படும் எனவும், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவே நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலினும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் துவக்கி வைக்கவுள்ளார். சிறந்த வீரர்கள், காளை உரிமையாளர்களின் கடந்தகால கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாண்டு டிராக்டர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன, மூன்று இடங்களிலும் டிஜிட்டல் திரையில் வீரர்கள் பிடிக்கும் மாடுகளின் எண்ணிக்கை உடனுக்குடன் ஒளிபரப்பு செய்யப்படும், மாடுகளுக்கு அனுமதி வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படும்” என்றார்.

