- Home
- Tamil Nadu News
- Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம்.. சென்னை உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!
Chennai High Court: கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வையாபுரி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணியின்போது உயிரிழந்தார். அதாவது அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இவரது மகன் ராமராஜூக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க அரசு முடிவு செய்தது. இந்த பணியினை வழங்க தலைமை மின் பொறியாளர் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அரசுக்கு பரிந்துரை செய்தார். இதன்படி, ராமராஜுவுக்கு உடுமலைப்பேட்டை மின்சார பகிர்மான வட்டத்தில் பணி ஒதுக்கி கடந்த 2003-ம் ஆண்டு மே 27-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பின்னர், 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ராமராஜ் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு தனக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், ராமராஜ்-க்கு பணி வழங்க அதே ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியே தலைமை பொறியாளர் பரிந்துரை செய்திருக்கிறார். அதன்படி அவரது பெயர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று 2024-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் , தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில் அரசு ஊழியர்கள் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாளை காரணம் காட்டி பழைய ஓய்வூதியம் பெற உரிமை கோர முடியாது.
ராமராஜுவுக்கு 2003-ம் ஆண்டு மே 27-ம் தேதி பணி நியமனம் வழங்கப்பட்டபோது, புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் கிடையாது. எனவே, பணிக்கு பரிந்துரைத்த நாளை கணக்கிட்டு பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக கூறியுள்ளார். அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

