- Home
- Tamil Nadu News
- TASMAC Uniform: டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய யூனிபார்ம்..நவம்பர் 15 முதல் கட்டாயம்! என்ன நிறம்?
TASMAC Uniform: டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய யூனிபார்ம்..நவம்பர் 15 முதல் கட்டாயம்! என்ன நிறம்?
TASMAC Uniform: டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் புதிய சீருடை கட்டாயம். மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிறங்கள் என்ன? 3 செட்டுக்கு சீருடைப்படி எவ்வளவு?உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துக்கொள்வோம்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய யூனிபார்ம்
தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதன்முறையாக ஒரே மாதிரியான சீருடை நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 2026 நவம்பர் 15 முதல் சீருடை அணிவது கட்டாயம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என பதவிக்கு ஏற்ப சீருடையின் நிறங்களும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எப்போது முதல் யூனிபார்ம்?
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே.விக்னேஷ், ஆகஸ்ட் 31, 2026 அன்று சட்டப்பேரவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று செட் சீருடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் சீருடை தொடர்பான வழிகாட்டுதலை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற நவம்பர் 15 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை அணிவது கட்டாயமாகிறது.
எந்த பதவிக்கு என்ன நிறம்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கான சீருடையில், கடை மேற்பார்வையாளர்களுக்கு இளம் அல்லது லேசான நீல நிற சட்டை மற்றும் அடர் நீல (Navy Blue) பேன்ட் வழங்கப்படுகின்றன.
அதேபோல், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு இளம்பழுப்பு (Beige) நிற சட்டை மற்றும் அடர் சாம்பல் நிற பேன்ட் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.6,000 சீருடைப்படி
ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு 3 செட் சீருடைகளுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். அதாவது ஒரு செட்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் துணி மற்றும் தையல் செலவுக்காக கணக்கிடப்பட்டுள்ளது.
சீருடைக்கான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் பெறும் நடைமுறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் செயல்படும் கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில், அங்கீகரிக்கப்பட்ட நிறங்களில் சீருடைக்கான துணிகள் கிடைப்பதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026-27ஆம் ஆண்டிற்கான ரூ.6,000 சீருடைப்படியை தகுதியுள்ள ஊழியர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சீருடைக்கான துணிகளை வாங்கி, நவம்பர் 10ஆம் தேதிக்குள் 3 செட் சீருடைகளையும் தைத்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் முதலமைச்சரான பிறகு டாஸ்மாக்கில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றங்கள்
717 டாஸ்மாக் கடைகள் மூடல்: கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து, ரயில் நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
21 வயதுக்கு கீழ் மது விற்பனைக்கு தடை: 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டது. வயது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள ஆவணங்களைச் சரிபார்க்கும் நடைமுறை அறிவிக்கப்பட்டது.
டாஸ்மாக்கில் டிஜிட்டல் புக்கிங் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்: 2026 ஆகஸ்டில் டாஸ்மாக் டிஜிட்டல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கடையில் எந்த மதுபான பிராண்டுகள் இருப்பில் உள்ளன என்பதைப் பார்த்து, தேர்வு செய்து, ஆன்லைனில் பணம் செலுத்தி, தேர்ந்தெடுத்த கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகமானது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 25 சதவீத வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 1 முதல் அறிவிக்கப்பட்ட தொகைகள்:
மேற்பார்வையாளர் - ரூ.33,023
விற்பனையாளர் - ரூ.30,284
உதவி விற்பனையாளர் - ரூ.28,680
வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட பணிச்சலுகைகள்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு, ரூ.20,000 பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடைகளின் அடிப்படை வசதிகளுக்கு மாதாந்திர தொகை
டாஸ்மாக் கடைகளில் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக,
மாநகராட்சி பகுதிக் கடைகள் - ரூ.5,000
நகராட்சி/பேரூராட்சி கடைகள் - ரூ.4,000
கிராமப்புற கடைகள் - ரூ.3,000 என மாதாந்திர சிறுசெலவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
MRP-ஐ விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், கூடுதல் தொகை வசூலித்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

