அண்ணாமலை மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களை ஓரம் கட்டிய நயினார்.. யாரெல்லாம் தெரியுமா?
பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது மட்டுமல்ல அவரது தீவிர ஆதரவாளர்களும் சீட் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு, அதிமுக வெற்றி வாய்ப்பு இல்லாத பெரும்பாலான தொகுதிகளை தள்ளிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை நேற்று வெளியிட்டது.
கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், அவினாசி (தனி) எல். முருகன், தஞ்சை எம். முருகானந்தம், மதுரை தெற்கு ராம சீனிவாசன், நாகர்கோயில் எம்.ஆர். காந்தி, விளவங்கோடு எஸ். விஜயதாரணி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்த முறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கோவையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் பாஜகவிற்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வானதி சீனிவாசன் போட்டியிடும் திட்டமிட்டதால் அண்ணாமலையை பாஜக தலைமை மொடக்குறிச்சியில் போட்டியிட வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் அண்ணாமலை மொடக்குறிச்சியில் போட்டியிட தயக்கம் காட்டிய நிலையில் தற்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இந்த முறை தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அண்ணாமலை மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன், எஸ்.ஜி.சூர்யா, வினோஜ்.பி.செல்வம், ஏ.பி. முருகானந்தம் ஆகியோருக்கும் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வேளச்சேரி தொகுதி தனக்கு கிடைக்கும் என்று அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வேளச்சேரி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
அதேபோல் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார். ஆனால் அங்கு அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் மாநில பொறுப்பாளராக இருந்த அமர்பிரசாத் ரெட்டி, தளி தொகுதியில் போட்டியிட விரும்பினார். அண்ணாமலை மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களும் ஒரே நேரத்தில் ஓரம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

