- Home
- Tamil Nadu News
- புல் மப்பில் ஓயாமல் டார்ச்சர் கொடுத்த மகன்! கடுப்பான 70 வயது தாய்! கட்டையால் கதையை முடித்த பயங்கரம்!
புல் மப்பில் ஓயாமல் டார்ச்சர் கொடுத்த மகன்! கடுப்பான 70 வயது தாய்! கட்டையால் கதையை முடித்த பயங்கரம்!
சேலம் மாவட்டத்தில் குடிபோதையில் தாயைத் தாக்கிய மகனை, தாய் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் காவடிகாரனூர் பாலிப்பெருமாள் கோயில்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனியப்பன் - காளியம்மாள் (70), தம்பதியினருக்கு சாந்தி என்ற மகளும், முத்துசாமி (49) என்ற மகனும் உள்ளனர். மகள் சாந்தியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மகன் முத்துசாமிக்கும் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணிற்கும் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முத்துசாமிக்கும் சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் முத்துசாமி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கோமதி என்ற கோவிந்தம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 3 வயதில் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் முத்துசாமி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி வந்ததால் தந்தை பழனியப்பன் மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். தாய் காளியம்மாள் மட்டும் தனது மகன் முத்துசாமி குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி குடிபோதையில் தினந்தோறும் வந்து மனைவி மற்றும் தாயிடம் தகராறு செய்து வந்ததால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோவிந்தம்மாள் முத்துசாமியுடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் காளியம்மாள் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு தனது மகன் முத்துசாமிக்கு சாப்பாடு செய்து கொடுத்து கொண்டு உடனிருந்துள்ளார். ஆனாலும் முத்துசாமி தினந்தோறும் மது அருந்திவிட்டு தனது தாயை அடித்து பணம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் நேற்று இரவு 7 மணிக்கு போதையில் வந்த முத்துசாமி தாய் காளியம்மாளை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆத்திரம் அடைந்த காளியம்மாள் போதையில் படுத்திருந்த தனது மகன் முத்துசாமி தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காளியம்மாளை கைது செய்து கொங்கணாபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் பணம் கேட்டு தினந்தோறும் தாயை தாக்கிய மகனை தாய் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.