- Home
- Tamil Nadu News
- ஒரு கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி.! சித்திரை திருவிழாவிற்கு மின்சாரம் வழங்க மறுப்பு- வெளியான ஷாக் தகவல்
ஒரு கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி.! சித்திரை திருவிழாவிற்கு மின்சாரம் வழங்க மறுப்பு- வெளியான ஷாக் தகவல்
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததால், மின்சாரம் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இந்தப் பிரச்சினை சட்டமன்றத்தில் எதிரொலித்ததை அடுத்து, நிலுவைத் தொகை செலுத்தப்பட்டு பிரச்சினை தீர்வு காணப்பட்டது. திருவிழா ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Madurai Chithirai Festival electricity bill issue : மதுரை சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிறப்பம்சமாகும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வரவுள்ளதால் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Madurai Chithirai Festival
மதுரையில் சித்திரை திருவிழா
இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் இந்த பிரச்சனை எதிரொலித்தது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கு மின்சாரம் வழங்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருக்கும் தகவல் அமைச்சருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.
Tamilnadu assembly
மின்சாரம் வழங்க மறுப்பு- சேகர்பாபு விளக்கம்
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2017 ஆண்டு முதல் தற்போது வரை 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை இருந்துவந்தது. இந்த நிலையில் சித்திரை திருவிழாவிற்காக 2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு 1.5 கோடி நிலுவை தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது. கள்ளலகர் பட்டை அணிந்து, ஆனந்தமாக, அழகாக, மகிழ்ச்சியோடு ஆற்றில் இறங்குவார் என்று பதில் அளித்தார்.
TAMILNADU TEMPLE
வீரசிங்கம்பேட்டை வைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு திருப்பணி
இதே போல திருவையாறு தொகுதி வீரசிங்கம்பேட்டை அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு திருப்பணி செய்ய அரசு முன்வருமா என திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, திருவையாறு தொகுதி வீரசிங்கம்பேட்டை அருள்மிகு வைத்தியநாத சாமி திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையானது.
அந்த ஒரு திருக்கோயில் மாத்திரம் 276 சிவலிங்கங்கள் கொண்ட ஒரு திருக்கோயில், கோயில் திருப்பணிகளுக்காக முதலமைச்சர் 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் அந்த நிதியின் கீழ் திருப் பணிகள் தொடரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.