விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கைப்படி விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழக அரசு ரூ.48.95 கோடி கல்விக் கடனைத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், மொத்த கல்விக் கடன் நிலுவை ரூ.16,302 கோடியாக உள்ள நிலையில், இந்தத் தள்ளுபடி போதுமானதா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக என விமர்சித்துள்ளார்.
அண்ணாமலைக்கு பெரியகருப்பன் பதில்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு எண்.33-ல் தெரிவித்துள்ள படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்து அவற்றிற்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து அவர்கள் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்தது முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க அரசுதான் என கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு பயிர் கடன்
மேலும் 31.01.2021 அன்று வரை கூட்டுறவு சங்கங்களின் சிறு. குறு விவசாயிகள் 16,43,347 நபர்கள் பெற்றிருந்த பயிர்கடன்கள் ரூ.12,110.74 கோடி அளவிலான தள்ளுபடிக்கான தொகையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தின் நிதிநிலை கடந்த கால அரசால் கஜானா காலி செய்த நிலையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அதற்கு நிதி ஒதுக்கி விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாய பெருங்குடி மக்களின் வாழ்கையை காப்பாற்றியது தளபதி அவர்கள் தலைமையிலான கழக அரசு தான்.
வட்டியை செலுத்தும் அரசு
மேலும் அரசு பொறுப்பேற்ற பின் 2021-2022 ஆம் ஆண்டில் முதல்முறையாக ரூ.10.635.37 கோடி பயிர் கடன்களை 15.44,679 விவசாயிகளுக்கு வழங்கியது. 31-03-2025 வரை நான்கு ஆண்டு காலத்தில் ரூ.61007.65 கோடி கடன்களை 79,18,350 விவாசய பெருமக்களுக்கு கடனாக பயிர் வழங்கியுள்ளது. விவசாய பெருமக்களை ஊக்குவிக்கும் விதமாக பயிர்கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை தமிழக அரசே செலுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விவசாய கடன்களுக்கு மறு நிதி அளிக்கும். ஆனால், தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நபார்டு வங்கி கடந்த காலத்தில் மறு நிதி அளிப்பதை வெகுவாக குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மானிய விலையில் உரம், விதைகள்
இருந்த போதிலும் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு கடன் அதிக அளவில் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழக நிதியை வழங்கி எப்பொழுதும் இல்லாத அளவில் பயிர்கடன்கள் அதிக அளவில் விவசாய பெருமக்களுக்கு இவ்வரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கிராமபுற மக்கள் பயன் பெறும் வகையில் கடன் திட்டங்களையும்,
சேமிப்புகளை ஊக்குவிக்கின்ற வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்களையும் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உரம் மற்றும் விதைகள் போன்றவை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் மானிய விலையில் தரமானதாகவும் வழங்கி வருகிறது எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.