- Home
- Tamil Nadu News
- அக். 22ல் பால் விநியோகம் நிறுத்தம்! கொள்முதல் விலை உயர்வு மாநிலம் தழுவிய போராட்டம்!
அக். 22ல் பால் விநியோகம் நிறுத்தம்! கொள்முதல் விலை உயர்வு மாநிலம் தழுவிய போராட்டம்!
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. வரும் 22-ஆம் தேதி ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்தி, போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வு கோரி போராட்டம்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) பால் விநியோகத்தை நிறுத்தி, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டம் நடத்த உள்ளதாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள்
நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி, பின்வருமாறு கூறினார்:
"தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலமாகப் பாலை கொள்முதல் செய்து வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பாலின் விலையை, லிட்டர் ஒன்றுக்கு தற்போதைய விலையில் இருந்து ரூ.15 உயர்த்த வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். இருப்பினும், அரசு கொள்முதல் விலையை இதுவரை உயர்த்தவில்லை.
பால் விநியோகித்தை நிறுத்தி போராட்டம்
எனவே, அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை), தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்திப் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும், அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
நாங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தப் போராடி வரும் இந்தச் சூழ்நிலையில், ஆவின் மூலம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ரூ.210 மதிப்பிலான 250 கிராம் பால்கோவாவை நிர்பந்தத்தின் அடிப்படையில் வசூலிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.