- Home
- Tamil Nadu News
- KN Nehru Case : திமுகவில் மீண்டும் ஒரு கைது... கே.என்.நேரு தரப்புக்கு இடியை இறக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
KN Nehru Case : திமுகவில் மீண்டும் ஒரு கைது... கே.என்.நேரு தரப்புக்கு இடியை இறக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
KN Nehru Case : டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கவி பிரசாத் கைது
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவிபிரசாத் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தற்போது கவிபிரசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சிலருக்குச் சாதகமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
13 பேர் மீது வழக்குப்பதிவு.. வெளிநாடு செல்லவும் தடை!
இந்த ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர்கள், ரவிச்சந்திரன் மற்றும் அவரது உதவியாளர் கவிபிரசாத் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் தேவையான அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்தன. இதற்கிடையே, ரவிச்சந்திரனின் உதவியாளரான கவிபிரசாத் வெளிநாடு செல்ல முயன்றபோது அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அவரிடம் பெறப்பட்ட தகவல்களையும், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் விசாரணை தீவிரம்!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ஒப்பந்தப் பணிகளில் சுமார் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்ற புகார் இந்த வழக்கின் முக்கிய அம்சமாக உள்ளது. அமலாக்கத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, எந்தெந்த ஒப்பந்தங்கள் யாருக்கு வழங்கப்பட்டன, அவை முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றி ஒதுக்கப்பட்டனவா, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே நடைபெற்ற சோதனைகள் மற்றும் விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கவிபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் நடத்தப்படும் விசாரணை இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இந்த ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக அடுத்தகட்டமாக யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.















