தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. குடையை மறக்காதீங்க மக்களே.!
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது இயல்பை விட 7% குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு வானிலை அப்டேட்
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்தது மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த மாற்றத்தின் தாக்கமாக, இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆரம்பமாக இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று முன்பே எச்சரிக்கை விடப்பட்டது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வானிலை துறை வெளியிட்ட தகவலின் படி, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி பகுதிகளிலும் பலத்த மழை சாத்தியம் உள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை குறைவு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியிருந்தாலும், ஒன்றரை மாதங்கள் கடந்த பல மாவட்டங்களுக்கு போதுமான மழை இல்லை. அதுபோல் இருந்தாலும், இன்று காலை 8 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பதிவானது. மொத்த மழைப்பொழிவு கணக்கெடுப்பில், திருநெல்வேலி அதிகபட்சமாக 477.0 மிமீ மழையைப் பெற்றுள்ளது. சதவீத அளவில் திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் +61% அதிக மழை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயல்பை விட -52% குறைவு காணப்படுகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு–புதுச்சேரி சராசரி மழை 257.9 மிமீ; இது இயல்பை விட -7% குறைவாகும்.
அடுத்த நாட்களில் மழை எப்படி இருக்கும்?
இந்த மாத இறுதி வரை வடக்கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் பிரதீப் ஜான். மேலும், இன்று காலை 9 மணிக்கு சென்னை வெதர்மேன் வெளியிட்ட தகவலில், “இலங்கை கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. புதுச்சேரி–நாகப்பட்டினம் இடையே மழை தொடங்கியுள்ளது. நாளை முதல் வட தமிழகத்தில் மழை அதிகரிக்கும்,” என கூறப்பட்டுள்ளது.