48 மணிநேரத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Tamilnadu Rain: இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கடும் பனிபொழிவு
தமிழகத்தில் கடும் பனிபொழிவு நிலவி வரும் நிலையில் பிப்ரவரியில் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் எப்போதும் இல்லாத வகையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
அதாவது பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் பிப்ரவரி 18ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் பிப்ரவரி 19ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 20ம் தேதி
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் எச்சரிக்கை
நாளை முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15ம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 17ம் தேதி திருவள்ளூர், சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
பிப்ரவரி 18ம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

