- Home
- Tamil Nadu News
- குன்றத்தூர் அபிராமியை நினைவிருக்கா? கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு!
குன்றத்தூர் அபிராமியை நினைவிருக்கா? கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு!
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி, கள்ளக்காதலுக்காக தன் இரண்டு குழந்தைகளையும் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை குன்றத்தூர் அபிராமியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு டிக் டாக் வீடியோ மூலம் மிகவும் பிரபலமாகி கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொடூரமான கொலை செய்து தமிழ்நாட்டை அதிர வைத்தார். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் அபிராமி . இவரது கணவர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில், அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கள்ளக்காதலன் சுந்தரத்தை பார்க்க முடியாமல் பேச முடியாமலும் அபிராமி தவித்து வந்தார். இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார்.
இதனால் கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். இதனையடுத்து தான் பெற்ற குழந்தைகளை தலையணையால் அமுக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்தார். ஆனால், இதில் கணவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். மறுநாள் காலையில் குழந்தைகளை கணவர் எழுப்ப சென்ற போது குழந்தைகளை தூக்கட்டும் எழுப்ப வேண்டாம் என்று கூறியதால் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் கள்ளக்காதலனுடன் அபிராமி அங்கிருந்து கிளப்பினார்.
பின்னர் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த விஜய் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை கிடப்பதை கண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு
இதுதொடர்பான வழக்கு சுமார் 8 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.