இனி லக்கேஜ்க்கு இலவசம்.! பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் இலவச மற்றும் கட்டண லக்கேஜ் விதிகளை வெளியிட்டுள்ளது. சொந்த உபயோகப் பொருட்கள், குறிப்பிட்ட அளவுள்ள சூட்கேஸ்கள், 20 கிலோ எடை வரை இலவசம்.
பேருந்தில் மோதல்
பேருந்துகளில் பயணிகள் வெளியூர் பயணம் செய்யும் போது தங்களது உடமைகளை கொண்டு செல்வார்கள். அப்போது பேருந்து நடத்துனருக்கும் பயணிகளுக்கும் லக்கேஜ்க்கு டிக்கெட் எடுப்பதில் மோதல் ஏற்படும். பல சமயங்களில் பேருந்தில் இருந்து நடு ரோட்டில் இறக்கி விடும் நிலையும் உள்ளது. இதனால் பயணிகள் கடும் பாதிப்பு அடையும் நிலையில் எந்த வகையான லக்கேஜ் இலவசமாக கொண்டு செல்லலாம், எந்த வகையான லக்கேஜ்க்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
இலவசமாக கொண்டு செல்லும் பொருட்கள்
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்/பைகள், கேமிரா போன்ற கையடக்கமான சாதனங்கள், Laptops சிறிய அளவிலான கையில் எடுத்து செல்லதக்க மின் சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் (Wheel Chair), கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் முதலியவைகளும் இலவசமாக ஏற்றிச்செல்ல கூடிய சுமைகளாகும் என கூறப்பட்டுள்ளது
கட்டணம் இல்லை
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துச்செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65cm (Medium Size) அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். மேலும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம்.
tamilnadu bus
கட்டணத்தோடு கொண்டு செல்லும் பொருட்கள்
பயணிகள் எடுத்துவரும் 65cm (Large size) அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு / பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் மேலும் 20 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைக்களுக்கு / பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
Chennai Bus
பேருந்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள்
அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைககளை அனுமதிக்கக் கூடாது. சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது. பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது. செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.